Latest

தாமான் மெலாவாத்தியில் காதல் முறிவால் ஆவேசம்; காதலியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்த ஆடவன் கைது

அம்பாங் ஜெயா, செப்டம்பர் -27 – காதல் தோல்வியை தாங்க முடியாமல் முன்னாள் காதலியின் வீட்டு வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, சேதங்கள் ஏற்படுத்தியதோடு மிரட்டலும் விடுத்துச் சென்ற ஆடவன் போலீசாரால் கைதுச் செய்யப்பட்டான்.

செப்டம்பர் 18-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் அம்பாங் ஜெயா, தாமான் மெலாவாத்தியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

இருவருக்கும் இடையிலான 3 மாதக் காதலை இனியும் தொடருவதில்லை என 24 வயது அப்பெண் முடிவெடுத்ததால், 31 வயது அவ்வாடவன் ஆவேசமடைந்துள்ளான்.

இதனால் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றவன் அவரின் அறைக் கண்ணாடியை நோக்கி வெளியிலிருந்து கற்களைக் எறிந்துள்ளான்.

பின்னர், அப்பெண்ணின் பெயரை உரக்கக் கத்திக் கொண்டே, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் dumbbell கருவியைக் கொண்டு வரவேற்பறையின் கண்ணாடிக் கதவை உடைத்தான்.

அதே dumbbell கருவியைக் கொண்டு அவளது அறைக் கதவையும் உடைக்க முயன்று தோல்வி கண்டவன், பால்கனி வழியாக நுழைந்து அறைக்கதவை உடைத்து, அப்பெண்ணை மிரட்டினான்.

பின்னர் அவனாக அங்கிருந்து சென்று விட்டான்.

அவ்வாடவனது அடாவடியால், அப்பெண்ணின் தந்தைக்குச் சொந்தமான அவ்வீட்டில் 20,000 ரிங்கிட்டுக்கு சேதாரம் ஏற்பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் கைதானவனுக்கு, ஏற்கனவே 13 குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்தது.

விசாரணைக்காக 4 நாட்களுக்கு அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!