
பத்து மலை, செப்டம்பர்-2 – நாட்டின் புகழ்பெற்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் MPTB எனப்படும் துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் ஒன்று.
ஏராளமான தமிழாசிரியர்களை கொடுத்தப் பெருமை அதற்குண்டு.
இந்நிலையில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து அண்மையில் பத்து மலை Shenka Hall மண்டபத்தில் பிரமாண்ட ஒன்றுகூடல் நிகழ்வை நடத்தினர்.
1992-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டு வரையில் அங்கு பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களானவர்களில் 152 பேர் அதில் பங்கெடுத்தனர்; 10 விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பங்கேற்று சிறப்பித்தார்.
MPTB-யில் தங்களின் நினைவலைகளை மீண்டும் பகிர்ந்து கொள்ளவும், பல ஆண்டுகளாக அவர்கள் கட்டியெழுப்பிய நட்பு மற்றும் தொழில்முறை பிணைப்புகளைக் கொண்டாடவும், முன்னாள் மாணவர்களுக்கு இச்சந்திப்பு சந்தர்ப்பமாக அமைந்தது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் தமதுரையில் தமிழாசிரியர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டிப் பேசினார்.
கல்லூரி கால நினைவுகள் இன்னமும் பசுமையாக இருப்பதாக முன்னாள் மாணவரும் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவருமான Dr. A. விக்டர் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இந்நிகழ்வு சுமார் 6 மாத ஏற்பாட்டில் நடந்தேறியதாகக் கூறிய மற்றொரு முன்னாள் மாணவரான V. பாலசுப்ரமணியம், டத்தோ ஸ்ரீ சரவணனுக்கு இவ்வேளையில் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
வந்திருந்த விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டு ஒன்றுகூடல் இனியே நிறைவடைந்தது.