இந்தியா, செப்டம்பர் 20 – உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில், மாடு, பன்றி, மீன் போன்ற விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக எழுந்துள்ள புகார் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக, தான் அப்போதே எச்சரித்ததாகவும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனக் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கூறியுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுக் காலம் கலப்பட நெய் மூலமே நெய்வேத்திய பிரசாதம் கடவுளுக்குத் தயார் செய்யப்பட்டு வந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வில் , லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிசக் கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பொய் குற்றச்சாட்டு என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருக்கின்றார்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைக்கும் குற்றச்சாடு என்றும் அரசியலுக்காக சந்திரபாபு நாயுடு சமயத்தை பயன்படுத்துகிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.