
குவாலா திரெங்கானு, டிசம்பர் 19 – குவாலா திரெங்கானு Chabang Tiga சாலையில் அமைந்திருக்கும் நகை கடை ஒன்றில், போலி பணத்தைப் பயன்படுத்தி சுமார் 30,000 ரிங்கிட் மதிப்பிலான தங்க நகைகளை வாங்க முயன்ற ஆடவனின் திட்டத்தை அக்கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் திறமையாக முறியடித்தார்.
வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி மற்றும் இளஞ்சிவப்பு முகக்கவசம் அணிந்து கடைக்கு வந்த அந்நபர் நகைகளின் புகைப்படங்களை எடுத்து, பின்னர் அதனை வாங்க விருப்பம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அந்த ஆடவன் நகைக்கான பணத்தை வழங்கியபோது, நோட்டுகளின் விளிம்புகள் வெண்மையாக இருப்பதை ஊழியர் கூர்ந்து கவனித்துள்ளார்.
அந்நிலையில் அவர் பணத்தை பரிசோதிக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சந்தேகநபர் கடையின் முன் நிறுத்தியிருந்த கருநீல நிற பெரொடுவா ஆக்சியா காரில் தப்பிச் சென்றுள்ளான். அவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்ட வாகன பதிவு எண்ணும் போலியானது என்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன் நகை கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று குவாலா திரெங்கானு காவல் துறை தலைவர் Assistant Commissioner Azli Mohd Noor கூறியுள்ளார்.



