கடந்த 12-ஆம் தேதி திரெங்கானுவில் அமைந்துள்ள UNISZA எனும் சுல்தான் சைனால் அபிடின் பல்கலைக்கழகத்தின் 16-ஆம் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 63 மருத்துவ துறை பட்டதாரிகளில் 14 இந்திய மாணவர்கள் பட்டம் பெற்று தங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெருமைச் சேர்த்தனர்.
கல்வியின் வழி சமூகம் வளர்ச்சி காண்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள இவர்களின் அடைநிலைக்கு பெற்றோர்களின் பங்களிப்பே மிகவும் பிரதானமாக இருந்ததாக பட்டம் பெற்றவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பெருமையுடன் வெளிப்படுத்தினர்.
இவர்களில் தற்போது ஈப்போ பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரியும் சித்தியவானைச் சேர்ந்த சுரேந்திரன் ஜெகதீசனும் ஒருவராவார். இந்த வெற்றிக்கு தமது தாயார் சுந்தரி முத்துசாமி கொடுத்த ஊக்கத்தையும் செய்த தியாகத்தையும் நன்றியுணர்வோடு நினைவுகூர்வதாக சுரேந்திரன் கூறினார்.