
கோலாலம்பூர், மார்ச்-6 – தீயணைப்பு-மீட்புத் துறையில் மலாய்க்காரர் அல்லாதோரை மேலும் அதிகமாகச் சேர்க்க அரசாங்கம் முன் வர வேண்டும்.
நாட்டுக்கான சேவையில் அனைத்து இனங்களின் பங்களிப்பும் இருப்பதை இதன் மூலம் உறுதிச் செய்ய முடியுமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கூறினார்.
வெளியில் ஏராளமான மலாய்க்காரர் அல்லாதோர் அரசுப் பணியில் குறிப்பாக தீயணைப்புப் படையில் இணைந்து பணியாற்றிட விருப்பம் கொண்டுள்ளனர்.
அவர்களை வேலைக்கெடுப்பதில் அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும்; உயிர் காக்கும் தொழில் என்பதால் அனைத்தின மக்களும் கை கோர்த்து செயல்பட நல்ல வாய்ப்பாக அமையுமென ராயர் சொன்னார்.
மக்களவையில் தீயணைப்புச் சேவை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய போது ராயர் அக்கோரிக்கையை முன்வைத்தார்.
பொதுச் சேவைத் துறையில் ஒட்டுமொத்தமாக 1 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களில் வெறும் 47,000 பேர் மட்டுமே இந்தியர்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, அரசுப் பணியில் குறிப்பாக தீயணைப்புப் படை வாயிலாக ஏராளமான மலாய்க்காரர் அல்லாதோரை சேர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றார் அவர்.