
ஷா ஆலாம், டிசம்பர்-3 – ஞாயிறன்று ஷா ஆலாம் அருகே கூட்டரசு நெடுஞ்சாலையில் ஆபத்தாக வாகனமோட்டியதோடு, அம்புலன்ஸ் வண்டியை நெருக்கத்தில் பின் தொடர்ந்து வைரலான ஆடவர் கைதாகியுள்ளார்.
விசாரணைக்கு உதவுவதற்காக சம்பவத்தன்று இரவு அக்காரின் உரிமையாளர் ஷா ஆலாம் போலீஸ் தலைமையகத்திற்கு கூட்டிச் சென்ற போது, 28 வயது அவ்வாடவர் கைதானார்.
சந்தேக நபர், உரிமையாளரிடம் காரை இரவல் வாங்கியிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் மொஹமட் இக்பால் இப்ராஹிம் (Mohd Iqbal Ibrahim) அதனை உறுதிப்படுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், கிள்ளானை நோக்கி கூட்டரசு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டியை, வெள்ளை நிற Honda Civic காரும் Yamaha MT-15 மோட்டா சைக்கிளும் அவசர சமிக்ஞை விளக்கை எரிய விட்டபடி அதனைப் பின் தொடர்ந்தன.
காரோட்டி, அம்புலன்ஸ் வண்டியில் கொண்டுச் செல்லப்பட்ட நோயாளியின் குடும்ப உறுப்பினர் அல்ல என்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இவ்வேளையில் அம்புலன்ஸ் வண்டியைப் பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிளோட்டியைப் போலீஸ் தேடி வருவதாக இக்பால் கூறினார்.