
புத்ராஜாயா, அக்டோபர்-16,
Mentor–mentee வழிகாட்டி முறையை ரக்கான் மூடா திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இன்று காலை புத்ராஜெயாவில் பகடிவதைத் தடுப்பு தொடர்பில் நடைபெற்ற இளைஞர் வட்டமேசை மாநாட்டில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இளம் வயது இளைஞர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் சிறந்த முன்மாதிரியாகவும் செயல்பட இந்த mentor mentee முறை வழிவகுக்கும் என்றார் அவர்.
ஆனால், இந்த வழிகாட்டிகள் அனைவரும் முன்கூட்டியே உரியப் பயிற்சி பெற வேண்டியது அவசியமாகும்; தவறான யோசனைகள் நிலைமையை மோசமாக்கி விடுமென அவர் எச்சரித்தார்.
மாநாட்டில் பகடிவதை பிரச்னையை எதிர்கொள்ள பல தரப்பினரின் பல்வேறு பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டன.
அவை அனைத்தும், நாட்டில் பகடிவதை பிரச்னையைத் துடைத்தொழிக்கும் முயற்சியில், கல்வி அமைச்சு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சுக்கும் உதவியாக இருக்குமென ஹானா சொன்னார்.
இவ்வேளையில், பகடிவதையைத் தடுக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மீது மட்டுமே திணிக்கப்படக் கூடாது.
மாறாக, அரசு சாரா இயக்கங்களும் பயிற்சிப் பெற்ற இளைஞர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, ஆசிரியர்களுக்கான மரியாதை மற்றும் அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது பற்றியும் பரிந்துரைகள் வலுவாக முன்வைக்கப்பட்டன.
ஆனால், சில இளைஞர்களோ, “மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது, தானாகக் கிடைக்கக்கூடியது அல்ல”என வாதிட்டதாக ஹானா இயோ குறிப்பிட்டார்.
மாநாட்டின் பரிந்துரைகள், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படவுள்ளன.