
ஈப்போ, ஜூலை-23- Lahat-டில் தெருநாய்கள் உயிருடன் புதைக்கப்பட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வைரலான நிலையில், அக்குற்றச்சாட்டை ஈப்போ மாநகர மன்றமான MBI மறுத்துள்ளது.
அடக்கம் செய்வது தெருநாய்களை நிர்வகிப்பதற்கான நடைமுறைகளின் ஒரு பகுதியாகும்; நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படியே அது மேற்கொள்ளப்பட்டதாக MBI விளக்கியது.
அவ்வகையில் சர்ச்சையாக்கப்பட்டுள்ள சம்பவத்தில் கூட, விலங்குகள் தொடர்புடைய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே மனிதாபிமான முறையில் அவை கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
இந்தக் கருணைக்கொலை, பேராக் கால்நடை சேவைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு, தெருநாய்கள் இறந்தது உறுதிச் செய்யப்பட்ட பின்னரே அவை அடக்கம் செய்யப்பட்டன.
எனவே, அவை உயிருடன் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என, MBI தெளிவுப்படுத்தியது.
சடலங்கள் பாதுகாப்பாகவும், பொது சுகாதாரத் தர நிர்ணயங்களுக்கு ஏற்பவும் அப்புறப்படுத்தப்படுவதை உறுதிச் செய்ய, அவை அடக்கம் செய்யப்படுவது அவசியமாகும்.
நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி, தெரு விலங்குகளை நெறிமுறை மற்றும் பொறுப்புடன் கையாள்வதில் மாநகர மன்றம் உறுதியாக உள்ளதாகவும் MBI கூறியது.
MBI-க்குச் சொந்தமான லாரியில் ஏராளமான தெருநாய்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டதைக் காட்டும் 2 வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.