
ஈப்போ, மார்ச்-10 – ஈப்போ, ஜாலான் பெசார் மகிழம்பூவில் உள்ள பல்பொருள் விற்பனைக் கடையில் நாயின் மீது சுடுநீர் ஊற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், போலீசார் 2 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.
2015 விலங்குகள் நலச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 428-ஆவது பிரிவின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதாக, ஈப்போ மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மொஹமட் சஜிடான் அப்துல் சுக்கோர் கூறினார்.
வைரலான அச்சம்பவம் குறித்து மார்ச் 7-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு புகார் பெறப்பட்டது.
தொடக்கக் கட்ட விசாரணையில், கடைக்கு வெளியே சுற்றிக் கொண்டிருந்த தெரு நாய் மீது வெளிநாட்டு ஆடவரான பணியாளர் ஒரு குவளை சுடு நீரை ஊற்றியது கண்டறியப்பட்டது.
சுடுநீர் ஊற்றப்பட்ட நாய் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கால்நடை சேவை கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
புகார் கிடைத்த அதே நாளில் சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டு விட்டது.
தற்போது விசாரணை முழுமைப் பெறும் தருவாயில் உள்ளது; முழுமைப் பெற்றதும் மேல் நடவடிக்கைக்காக அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என சஜிடான் சொன்னார்.
மிருகவதை சட்டப்படி குற்றமென்பதால் பொது மக்கள் அச்செயலில் ஈடுபட வேண்டாமென்றும் அவர் எச்சரித்தார்.
நாய் மீது சுடுநீர் ஊற்றிய வெளிநாட்டுத் தொழிலாளியை, அந்த பல்பொருள் கடை உடனடியாக வேலையிலிருந்து நீக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.