கோலாலம்பூர், நவம்பர் 8 – தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய ஆவணக்காப்பகம், 2024ஆம் ஆண்டிற்கான தேசிய பேச்சு வழக்கு மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக புத்ரா பல்கலைக்கழகத்தின் ஆதரவில் நடத்தியது.
இதில், சமூக மொழியின் வலிமையைப் பாதுகாத்தல் என்ற தலைப்பிலான கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில், தமிழ் காலிகிராபி (calligraphy) எனும் தமிழ் வனப்பெழுத்துக்கு மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மகுடம் சூட்டியது.
இக்கண்காட்சியில் தமிழ் வனப்பெழுத்துகளால் வரையப்பட்டிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் ஆகியோரின் ஓவியங்களுடன் தமிழ் காலிகிராபி எழுத்துகளால் உருவாக்கப்பட்ட தபால் தலைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இவ்வேளையில், மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ஆரோன் அகோ டாகாங்கிற்கு, மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில், அவரின் ஓவியத்தை நினைவுப் பரிசாக அப்பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புத் துறை விரிவுரையாளர் முனைவர் வேலு பெருமாள் வழங்கினார்.
எல்லா மொழிகளின் சிறப்பையும் தொன்மையையும் பாதுகாக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக தமிழ் காலிகிராபி இந்தக் கண்காட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக, தேசிய ஆவணக்காப்பகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ஜாப்பார் குறிப்பிட்டார்.