
கோலாலம்பூர், ஜூலை 17 – நாடு தழுவிய அளவில் மக்களின் முகவரிகளை ஒரே மாதிரியாகவும் துல்லியமாகவும் சேகரிப்பதற்கு மலேசிய தகவல் தொடர்பு அமைச்சு தேசிய முகவரி அமைப்பை (NAS) உருவாக்கியுள்ளது.
தகவல் தொடர்பு ஆணையத்தின் வழி, நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டின் முகவரியின் அடிப்படையில் எழும் பிரச்சினைகள் இந்த அமலாக்கத்தின் மூலம் தீர்க்கப்படுமென்று அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் கூறியுள்ளார்.
மலேசியாவில் சுமார் 12 மில்லியன் முகவரிகள் உள்ளன என்றும் முகவரித் தரவைச் சேமிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் உண்மைத் தகவலைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தகவல் தொடர்பு துறையின் இம்முயற்சி நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துமென்றும் மலேசிய மக்களின் உண்மை விலாசங்களை கண்டறியும் தலமாக இது அமையுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.