
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- தேசிய முன்னணியில் ம.இ.காவின் நிலை என்ன என்பது குறித்து கட்சித் தலைமை விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
அதன் மத்திய செயலவை உறுப்பினராக டத்தோ R.T.ராஜசேகரன் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா வெளியேற வேண்டுமென, கெடா, பினாங்கு, சிலாங்கூர், கோலாலாம்பூர் ம.இ.கா பேராளர் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தொண்டர்கள் தங்களின் விருப்பத்தை இப்படி வெளிப்படையாகவே கூறி வந்தாலும், தேசிய அளவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படுவது அவசியமாகும்.
கட்சியின் எதிர்காலத்தை உறுதிச் செய்தால் தான், 16-ஆவது பொதுத் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராக முடியும்.
எனவே, இவ்விவகாரத்தில் தேசியத் தலைவரும் மத்திய செயலவையும் விரைந்து முடிவெடுப்பதே சிறந்தது என இன்று வெளியிட்ட அறிக்கையில் ராஜசேகரன் கேட்டுக் கொண்டார்.
எதிர்காலம் கருதி, எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த ம.இ.கா தயார் என, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னதாகக் கூறியிருந்தார்.
அதே சமயம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா வேண்டாத விருந்தாளியாக நடத்தப்படுவதுடன், அமைச்சரவைப் பதவிகளும் மறுக்கப்பட்டது குறித்து , தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அண்மையில் ஏமாற்றம் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.