தைப்பிங், ஜன 7 – தைப்பிங் சந்தைப் பகுதியிலுள்ள மளிகைக் கடையில் பயனீட்டாளர்களுக்கு விற்காமல் அங்குள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 303 கிலோ சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
திங்கட்கிழமையன்று பொதுமக்களிடம் பெறப்பட்ட
தகவலின் அடிப்படையில் உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் தைப்பிங் கிளை மேற்கொண்ட Op Samar நடவடிக்கையின்போது இந்த விவகாரம் அம்பலத்திற்கு வந்தது.
பிற்பகல் 1 மணியளவில் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட ஒரு கிலோ சமையல் எண்ணெயை வாங்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அது முடிந்துவிட்டதாக அக்கடையின் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
அவரது பதிலில் சந்தேகம் கொண்ட அமைச்சின் அதிகாரிகள் அங்கு மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது அங்கிருந்த கிடங்கில் அட்டைப் பெட்டியிலிருந்து பெரிய அளவிலும் மற்றும் பணம் செலுத்தும் இடத்திலும் சமையல் எண்ணெய்
பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் பேரா கிளையின் இயக்குனர் டத்தோ கமலுடின் இஸ்மாயில் ( Kamalludin Ismail ) தெரிவித்தார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களான பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட ஒரு கிலோ சமையல் எண்ணெய் பொட்டலங்களை வைத்திருந்ததை அந்த கடை உரிமையாளர் மறைத்துள்ளார்.
1961 ஆம்டின் விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விசாரணைக்காக 757 ரிங்கிட் 50 சென் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்