கோலாலம்பூர், பிப் 4 – பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதிவரை கிள்ளான் பள்ளத்தாக்கில் கே.டி .எம் (KTM) இலசவ மின்சார ரயில் சேவையை வழங்குகிறது.
இந்த இலவச சேவை பிப்ரவரி 10 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி மறுநாள் பிப்ரவரி 11 ஆம்தேதி நள்ளிரவு மணி 11.59 க்கு நிறைவடையும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
500,000 பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதோடு, இது கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு அதிகமாகும் என்றும், தைப்பூசத்தின் போது பிப்ரவரி 11 ஆம் தேதி உச்சக் கட்டமாக அதிகமான பக்தர்கள் இலவச ரயில் சேவையில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமூகமான பரிவர்த்தனை செயல்முறையை உறுதி செய்வதற்காக, அனைத்து கட்டண முறைகளும் (KTMB Mobile (KITS) app) , ( Komuter Link Card) , (Touch ‘n Go Card) , உள்ளூர் வங்கி (debit/credit card) மற்றும் இயற்பியல் QR டிக்கெட்டுகள் மூலம் பணமில்லா முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
பிப்ரவரி 10 ஆம் தேதியும் பிப்ரவரி 11 ஆம் தேதியும் டிக்கெட் முகப்பிடங்களில் இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று அந்தோனி லோக் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
KTM மின்சார ரயில் சேவையின் செயல்பாட்டு நேரமும் நீட்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதிவரை நான்கு நாட்களுக்கு 24 மணிநேரமும் சேவை கிடைக்கும்.
இந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பத்துமலை திருத்தலத்தில் நடைபெறும் தனித்துவமான தைப்பூச விழா கொண்டாட்டங்களைக் காண விரும்பும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கே.டி.எம்மின் சேவை அமைந்துள்ளதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.