
கோலாலாம்பூர், ஜனவரி-20-பத்து மலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கிள்ளான் பள்ளத்தாக்குப் பயணிகளுக்கு KTM கம்யூட்டர் இரயில் சேவை 2 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் 24 மணி நேரங்களுக்கும் இச்சலுகை வழங்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார்.
இந்த இலவசப் பயணம் முதல் நாள் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் இரவு 11.59 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
பயணிகள் ACG தானியங்கி கதவு மூலம் ‘scan out’ செய்தாலே போதுமானது.
இச்சலுகைக்காக KTMB சுமார் RM1 மில்லியன் செலவை ஏற்றுக் கொள்வதாக, இன்று KL Sentral-லில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சொன்னார்.
2 நாட்கள் இலவச பயணத்தோடு, மொத்தமாக 4 நாட்கள் 3 இரவுகளாக 24 மணி நேர KTM இரயில் சிறப்பு சேவை வழங்கப்படுகிறது.
அதாவது ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை இந்த 24 மணி வரை சேவை நீடிக்கும்.
இக்காலக் கட்டத்தில் மொத்தம் 609 இரயில் சேவைகள் இயக்கப்பட்டு, 700,000 பயணிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, Rapid KL மற்றும் Rapid Penang மூலம் இலவச shuttle பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பசார் செனி, கோம்பாக் LRT மற்றும் கம்போங் பத்து MRT ஆகிய நிலையங்களிலிருந்து 10 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் பத்து மலை நோக்கி புறப்படும்.
தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பயணம் சீரானதாக அமைய அரசாங்கம் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.



