
ஷா ஆலம், ஜனவரி 15 – அலாம் மேகா, ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கலந்து சிறப்பித்தார்.
மலேசிய அடிதட சிலம்பக் கலைக் கழகத்தின் சிலம்பக் கலைஞர்களின் படைப்புகள், பாரம்பரிய பாரதநாட்டிய நடனம் ஆகியவை இவ்விழாவில் இடம்பெற்றன.
சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம் கண்ட வழிபாடுகளை அடுத்து, தனது தொகுதி மக்களுடன் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு பிரகாஷ் உரையாற்றினார்.
தனது தொகுதி மக்களுக்காகப் பல சமூகப் பணிகள் செய்து வரும் நிலையில், இவ்வருடம் இலவச கூடுதல் வகுப்பு திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக வணக்கம் மலேசியாவிடம் அவர் கூறினார்.
பிரகாஷ் சம்புநாதன், தனது தொகுதி மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவது மட்டுமின்றி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மக்களைச் சந்தித்து அவர்களின் சிக்கல்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளையும் அலுவலகத்தில் ஏற்படுத்தியுள்ளதாக கம்போங் பாரு ஐக்கோம் மற்றும் ஆலம் மேகாவின் கிராமத் தலைவரான கோபி முனியாண்டி தெரிவித்தார்.
அதேவேளையில், ஆலயத்தின் சமூக நடவடிக்கைகளுக்கும் எப்போதும் சட்டமன்ற உறுப்பினர் துணையாக இருப்பதாக ஆலயத்தின் தலைவர் மோகநாதன் தெரிவித்தார்.
இதனிடையே, சூரிய பொங்கல் அன்று ஆலயத்திற்கு வருகையளித்தவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் வணக்கம் மலேசியாவிடம் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.
அடுத்தடுத்து கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள மூன்று ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ள பொங்கல் விழாவிலும் பொது மக்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு பிரகாஷ் அழைப்பு விடுத்தார்.