
ஜோர்ஜ்டவுன், மார்ச்-19 – URA என்றழைக்கப்படும் நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா எதிர்கட்சியினரால் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில், வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ, அந்த உத்தேச சட்டத்தை ஆதரித்துள்ளார்.
அதே போன்றதொரு சட்டம் பினாங்கில் அமுல்படுத்தப்பட்டு, குடியிருப்பாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
3-ஆண்டு கால நகர்ப்புற புதுப்பித்தல் வழிகாட்டடுதலின் படி, பினாங்கு அரசு 6,837 குடியிருப்புகளை உள்ளடக்கிய 6 முன்னோடித் திட்டங்களை அடையாளம் கண்டது.
இந்த முன்னோடித் திட்டங்கள், தற்சமயம் பழைய மலிவு விலை வீடுகளில் வசிப்பவர்களுக்கு, மேலும் விசாலமான மற்றும் வசதியான வீடுகளை வழங்கும் என்றார் அவர்.
அந்த ஆறு திட்டங்களில் ஒன்றான URA Mahsuri வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, குடியிருப்பாளர்கள் முன்பு தங்கியிருந்த 247 சதுர அடி முதல் 547 சதுர அடி வரையிலான வீடுகளுடன் ஒப்பிடும் போது, இப்போது 850 சதுர அடி முதல் 900 சதுர அடி வரையிலான விசாலமான வீடுகளில் வசிக்கின்றனர்.
மலிவு விலை வீடுகளில் வசித்து வந்த 300 குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை இந்த URA Mahsuri திட்டம் உயர்த்தியுள்ளது.
இந்த முன்னோடித் திட்டங்களில், குடியிருப்பாளர்கள் விசாலமானதோடு மட்டுமல்லாமல் வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கூடிய வீடுகளைப் பெறுவர்.
எனவே, எதுவும் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், மக்களுக்குப் பயனளிக்கும் என்பதையே இது காட்டுகிறது.
ஆக, நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட URA சட்டம் குடியிருப்பாளர்கள் குறிப்பாக B40 வர்கத்தினரின் உரிமைகளைப் பாதிக்கும் எனக் கூறப்படுவது ஆதாரமற்றது என சுந்தரராஜூ கூறினார்.
குடியிருப்பாளர்கள் ஒரு போதும் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றார் அவர்.
URA என்பது வீடுகளை வாங்க முடியாதவர்களை, குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ஒரு நுட்பமான வழிமுறை என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
எனினும் அதனை மறுத்த வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், அம்மசோதா எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் வஞ்சிக்கவில்லை என தெளிவுப்படுத்தியிருந்தார்.