
மும்பை, ஏப்ரல்-4- வசீகரிக்கும் தனது கண்களால் மகா கும்பமேளாவின் போது இந்தியா முழுவதும் பிரபலமானவர் ஏழைப்பெண் மோனாலிசா போஸ்லே.
அங்குக் குடும்பத்தோடு சாதாரணமாக ருத்ராட்சை மாலைகள் விற்றுக் கொண்டிருந்தவர், ஒரே நாளில் புகழின் உச்சிக்குச் சென்றார்.
அவரைப் பார்ப்பதற்கே கும்பமேளாவில் கூட்டம் கூடியது. என்றாலும் அடுத்த சில நாட்களிலேயே கூட்டத்தார் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்து, குடும்பத்தாரால் அவர் சொந்த ஊருக்கே கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் தான் மோனாலிசாவின் பிரபலத்தைப் பயன்படுத்தி அவரை சினிமாவில் நடிக்க வைக்க சனோஜ் மிஸ்ரா எனும் இயக்குநர் முன் வந்தார்.
அடுத்த படத்தில் மோனாலிசா தான் கதாநாயகி என அவர் வீட்டுக்கே சென்று இயக்குநர் பேச, சினிமாவில் நடித்தால் வீட்டில் ஏழ்மைக் குறையுமே என்ற எண்ணத்தில் அவரும் ஒப்புக் கொண்டார்.
பட அறிவிப்புகள் வெளியாகி பலரும் மோனாலிசா மீது பொறாமைப் பட்ட நிலையில் தான் ஓர் அதிரடி திருப்பமே நிகழ்ந்துள்ளது. அதாவது, மோனாலிசாவைக் கூட்டி வந்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைதாகியுள்ளார்.
விசாரித்ததில், இதே போல் உத்தர பிரதேசத்தில் திடீரென சமூக ஊடகங்களில் பிரபலமான ஓர் இளம் பெண்ணை, தனது பிரபலத்தைப் பயன்படுத்தி மிரட்டி வரவழைத்துள்ளார். தனியார் உல்லாச விடுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பின்னர் அதையே வாடிக்கையாக்கி உள்ளார்.
அப்பெண் இதுவரை 3 முறை கருக்கலைப்பும் செய்து விட்டார்; என்றாலும் திருமணம் செய்துகொள்வதாக சனோஜ் வாக்குறுதிக் கொடுத்ததால் அப்பெண்ணும் பிரச்னை செய்யவில்லை.
ஆனால் இப்போது கும்பமேளா புகழ் மோனாலிசாவை நடிகையாக்குகிறேன் எனக் கூறிக் கொண்டு அவருடன் சனோஜ் ஊர் சுற்றுவதால், நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என அப்பெண் போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்தே சனோஜ் மிஸ்ரா கைதாக, மோனாலிசா ஏமாற்றத்துடன் ஊர் திரும்பியுள்ளார்.
சினிமா கனவு கலைந்ததை எண்ணி மோனாலிசா கலங்கி போன நிலையில், நல்லவேளை தப்பித்தாய், இல்லையென்றால் உன் வாழ்க்கையே போயிருக்கும் என வலைத்தளவாசிகள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.