
புக்காரெஸ்ட், ஏப்ரல்-6- ரோமானியாவில், விலைமதிப்புள்ள கல் என தெரியாமல் அதனை பல ஆண்டுகளாக வீட்டுக் கதவுத் தடுப்புக் கல்லாகப் பயன்படுத்தி வந்துள்ளார் ஒரு குடும்ப மாது.
அம்பர் எனப்படும் அந்த உபரத்தினக் கல்லின் மதிப்பு 4.86 மில்லியன் ரிங்கிட்டாகும். தலைநகர் புக்காரெஸ்ட் தென் கிழக்கே ஓர் ஆற்றின் அடிவாரத்தில் அக்கல்லைக் கண்டெடுத்ததாக அப்பெண் கூறினார்.
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய அம்பர் கல் துண்டாகவும் இது விளங்குகிறது. செறிவான செந்நிறத்தைக் கொண்ட அக்கல் 38.5 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டது.
பண்டைய மர பிசினைக் கொண்டுள்ள அக்கல், பெரும்பாலும் பழைய ஈயக் குட்டைகளில் கண்டெடுக்கப்படுபவையாகும். இதையடுத்து ஆய்வுப் பணிகளுக்காக போலந்து நாட்டின் வரலாற்று அருங்காட்சியக நிபுணர்களிடம் அக்கல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.