
கோலாலம்பூர்,ஏப்.13- அரசாங்கங்கள் மாறினாலும் நமது சவால்களும் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
77 ஆண்டுகளாக தீவிர அரசியல் பணி ஆற்றி வரும் ம.இ.காவுக்கும் இது ஒரு சவாலான காலக்கட்டம்.
அதை உணர்ந்தே, இந்திய சமூகத்திற்காகத் தொடர்ந்து போராடவும், நம்முடைய பிரச்சனைகளுக்கு நாமே சுயமாக தீர்வு காணவும் முடிவு செய்து அதற்கேற்ப பணியாற்றி வருவதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.
அந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறினால் பிறக்கும் இந்த சித்திரைப் புத்தாண்டில் நமக்கும் நம் சமூகத்துக்கும் நன்மைகள் வந்து சேரும் என, தமது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டார்.
கல்விதான் நம் சமூகத்தை முன்னேற்றுவதற்கான ஒரே வழி என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நன்குணர்ந்ததால் MIED, AIMST ஆகிய அமைப்புகளின் மூலமும் TAFE கல்லூரி மூலமும் இந்தியச் சமூகத்தின் கல்வித் தேவைகளை இயன்ற வரையில் ம.இ.கா பூர்த்திச் செய்து வருகிறது.
இதுவரையில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை கல்வி நிதியாக வழங்கியுள்ளோம்; சிறப்பான தேர்ச்சிகள் பெற்றிருந்தும் பொதுப் பல்கலைக் கழகங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு நாமே உபகாரச் சம்பளம் வழங்கி AIMST பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில வாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம் என தான் ஸ்ரீ விக்கி சொன்னார்.
இந்நிலையில், இந்த சித்திரை புத்தாண்டு இந்திய சமூகத்தினரின் குடும்பங்களுக்கு செல்வச் செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் அள்ளித் தர, எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும் என தாம் வேண்டிக் கொள்வதாக, தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.