கோலாலம்பூர், டிச 24 – பல இனங்களையும் கொண்ட மலேசியாவில் கிறிஸ்துமஸ் நல்லிணக்கத் திருநாளாக அமைய வேண்டும் என்பதோடு இந்த பண்டிகையைக் கொண்டாடும் கிறிஸ்துவ அன்பர்ளுக்கு தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.
மலேசியாவின் திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் கலச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் , பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் Madani கொள்கைக்கு ஏற்ப அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடுவோம் என அவர் வலியுறுத்தினார்.
உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்துவ பெருமக்கள், இறைத் தூதராம் ஏசுபிரான் அவதரித்த இந்த நாளை, கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடி குதூகலிக்கும் இந்த வேளையில் மலேசியத் திருநாட்டில் வாழ்கின்ற கிறிஸ்துவ சகோதரர்களும் இந்த தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
மலேசியாவில் பண்டிகைகள் என்பது இனம்-சமயம் -மொழி-பண்பாடு போன்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வுடன் அனைத்து மக்களாலும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருவதாக தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.