
செகாமாட், ஆகஸ்ட்-15,
ஜோகூரில் ஒரு காலத்தில் பிரபல தலைவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக அறியப்பட்டது தான் செகாமாட்.
மறைந்த ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ சி.சுப்ரமணியம், முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr. ச. சுப்ரமணியம் என பல ஜாம்பவான்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்த தொகுதி அது.
இன்று அத்தொகுதிக்கான தற்போதைய மக்களவைப் பிரதிநிதியாக இருப்பவர், பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த இளைஞர் யுனேஸ்வரன் ராமராஜ்.
ஜோகூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்றான செகாமாட்டில், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களே மக்களின் பெரிய எதிர்பார்ப்பு என, வணக்கம் மலேசியாவிடம் அவர் தெரிவித்தார்.
அவ்வகையில் தொகுதி மக்களுக்கு தரமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதே தன்னுடைய முக்கியக் கவனமாகவும் உள்ளதாகக் கூறுகிறார்.
செகாமாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கேட்ட போது, அது தொகுதி பிரச்னை மட்டுமல்ல, ஒரு தேசியப் பிரச்னையும் கூட என்பதை யுனேஸ்வரன் ஒப்புக் கொண்டார்.
தொகுதி மேம்பாடுகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் செகாமாட் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்தியர்கள் சம்பந்தப்பட்டபிறப்புப் பத்திரம், அடையாள அட்டை போன்ற பிரச்னைகளுக்கு செகாமாட்டில் எந்த அளவுக்கு உள்ளன என கேட்கப்பட்டதற்கு யுனேஸ்வரன் கூறியதாவது…
2022 பொதுத் தேர்தலில் முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட யுனேஸ்வரன் தமது சேவையின் மூலம் தொகுதி மக்களின் நன்மதிப்பையும் தொடர் ஆதரவையும் பெற மேலும் கடுமையாக பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.