
கோலாலம்பூர், அக் 21 – நாட்டின் அரிசி கையிருப்பு ஐந்து மாதங்களுக்கு கூடுதலாக இருக்கிறது என விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்திருக்கிறார். மக்களால் அதிகமான உட்கொள்ளப்படும் மூலப்பொருளான அரிசி போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த குறுகிய மற்றும் நீண்டகால செயல்திட்டங்களை தனது அமைச்சு அமல்படுத்தி வருவதாக அவர் கூறினார். அவசர நிலை ஏற்பட்டால் இதர உற்பத்தியாளர்களுடன் ஒத்துழைப்பதை தொடர்வதும் இந்த நடவடிக்கையில் அடங்கும் . இவ்வாண்டு அக்டோபர்வரை சேமிப்பு உட்பட தற்போது கையிருப்பில் இருக்கும் 1.1 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு போதுமானதாக உள்ளது.
அரிசி விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதவிர கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைப்பது மற்றும் அவை போதுமானதாக இருப்பதையும் உறுதிப்படுத்த பல்வேறு முயற்சிகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது என இன்று நாடாளுமன்றத்தில் கிரிக் பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் Fathul Huzir Ayob எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது முகமட் சாபு தெரிவித்தார்.
அரிசி உற்பத்தியில் விவேக விவசாயம் என்ற முறையும் நாங்கள் முயற்சி செய்கிறோம். எனினும் அதன் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. நெல் விவசாயிகள் பாரம்பரியமாக தங்கள் நிலங்களில் வேலை செய்வதையே விரும்புகின்றனர் என அவர் கூறினார்.