
கோலாலம்பூர், அக்டோபர்-22,
மலேசியத் தொழிலாளர்களின் புத்தாக்கம் மற்றும் திறன்களுக்கு இடையே சமநிலையை உறுதிச் செய்ய, AI தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் திறன் மேம்பாடும் இணைந்து செயல்பட வேண்டும்.
AI, புதிய சாத்தியக்கூறுகளைத் திறக்கும் அதே வேளை, தொழில்நுட்பம் விரிவாக்கத்தால் சமத்துவமின்மை மற்றும் வேலை இழப்புகள் உள்ளிட்ட அபாயங்களையும் கொண்டு வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
_”கட்டுப்படுத்தப்படாவிட்டால், திறன்களை அணுகுபவர்களுக்கும் அணுகாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அது அதிகரித்து விடும். எனவே தான் திறன் மேம்பாட்டை ஒரு பின்னோக்கிய சிந்தனையாகக் கருதாமல், சவால்களைத் தாங்கி நிற்கும் தேசிய அடித்தளமாகக் கருத வேண்டும்” என்றார் அவர்.
‘ஆசியான் திறன் ஆண்டு 2025: உலகளாவிய திறன்கள் மன்றம் 2025’ தொடக்க விழாவில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, பிரதமரின் உரையை வாசித்தார்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.
இவ்வேளையில், அதே நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஸ்டீவன் சிம், என்னதான் உலகம் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக் கொண்டாலும், தொழிலாளர்களின் மரியாதையும் நலனும் முக்கியம் என்பதே அரசின் நிலைப்பாடு என்றார்.
ஆகஸ்ட் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட _gig workers_ சட்டம் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதே அதற்கு சான்று என அவர் சொன்னார்.
மேலும், 2025 தேசிய பயிற்சி வாரத்திலல் சுமார் 4 மில்லியன் மலேசியர்கள் பங்கேற்றதைக் குறிப்பிட்டு, தென்கிழக்காசியா “உலகின் மிகவும் திறமையான பகுதியாக” உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோலாலம்பூர் ஷங்ரிலா ஹோட்டலில் இரு நாட்கள் நடைபெறும் இந்த அனைத்துலக மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.