
கோலாலம்பூர், நவம்பர்-1,
ஒரு மருத்துவரான Dr தர்ஷினி தங்கதுரை, நாட்டின் முதல் இந்தியப் பெண் தொழில்முறை உடல் கட்டழகு வீராங்கனையாக வரலாறு படைத்துள்ளார்.
40 வயதான தர்ஷினி, கடந்த வாரம் தென் கொரியாவில் நடைபெற்ற அனைத்துலக உடல் கட்டழகு மற்றும் உடற்பயிற்சி தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று IFBB Pro Card அங்கீகாரத்தைப் பெற்றார்.
இந்த அங்கீகாரத்தை வைத்துள்ள வெறும் ஏழே மலேசியர்களில் ஒருவராகவும் தர்ஷினி திகழ்கிறார்.
இதன் மூலம் உலகளாவிய IFBB Pro லீக் போட்டிகளிலும், ஒலிம்பியா மேடையிலும் பங்கேற்க இவர் தகுதி பெற்றுள்ளார்.
தொழில்முறை உடல் கட்டழகு வீராங்கனையாக இருப்பதோடு, Dr தர்ஷினி பெட்டாலிங் ஜெயாவில் தனிப்பட்ட பயிற்சியாளராகவும், கிள்ளானில் தனது குடும்ப கிளினிக்கில் பகுதி நேர மருத்துவராகவும் பணிபுரிகிறார்.
“உடல் கட்டழகை வெறும் மருந்துகளாலோ அல்லது குறுக்கு வழியிலோ பெற்றுவிட முடியாது; மாறாக ஒழுக்கம், பொறுமை, விடாமுயற்சி தேவை” என்றார் அவர்.
எடை தூக்கும் பயிற்சி வயது முதிர்ச்சியிலும் மூட்டு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் என்ற ஆலோசனையையும் இவர் பகிர்ந்துகொண்டார்.
Dr தர்ஷினியின் சாதனை, மலேசியப் பெண்களுக்கும் இந்தியச் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.



