
கோலாலம்பூர், மார்ச் 6 – நாட்டில் பல்வேறு இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டுவரும் ஷம்ரி வினோத் ( Zamri Vinoth ) மீது உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்துக்களை இழிவுபடுத்தும் வகையிலும், இனப் பதற்றத்தைத் தூண்டும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் ஷம்ரி வினோத் பதிவேற்றம் செய்துள்ள அறிக்கையை தாம் வன்மையாக கண்டிப்பதாக குணராஜ் தெரிவித்தார்.
அவரது அறிக்கை இந்து சமூகத்தின் சமயப் பழக்கவழக்கங்களை குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி, சீபில்ட் கோயில் விவகாரத்தின்போது தீயணைப்பு வீரர் அடிப் மரணத்துடன் இணைப்பது மலேசியாவின் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளதாக சிலாங்கூர் மந்திரிபுசாரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான குணராஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மலேசியா பல இன மற்றும் பல சமயங்களைக் கொண்ட நாடாக இருப்பதால் பல்வேறு பின்னணியில் உள்ள மக்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் பேணப்பட வேண்டும்.
சினமூட்டும், அவதூறான அல்லது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு அறிக்கையும் சமரசம் இல்லாமல் உடனடியாக கையாளப்பட வேண்டும்.
எனவே 1948ஆம் ஆண்டின் தேச நிந்தனைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் உள்ளிட்ட தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் ஷம்ரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சைபுடினை குணராஜ் கேட்டுக்கொண்டார்.