கோலாலம்பூர், அக்டோபர்-5 – MyJPJ செயலியில் தான் ஒரு மலேசியக் குடிமகன் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து, மலேசிய உரிமைக் கட்சியின் இடைக்காலத் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் (David Marshel) அதிர்ச்சித் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை இல்லாததால், மோட்டார் சைக்கிள்களுக்கான B1,B2 உரிமத்தை முழு B உரிமமாக மாற்றும் சிறப்புத் திட்டத்தில் பங்கேற்கும் தகுதி எனக்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் பிறந்து, புக்கிட் மெர்தாஜாம் உயர் நிலைப் பள்ளியில் படித்த நான், எப்படி நாடற்றவனானேன் என மார்ஷல் கேள்வி எழுப்பினார்.
31 ஆண்டுகளாக முறையான B2 பிரிவு உரிமத்தை வைத்துள்ளேன்.
JPJ அல்லது போலீசிடமும் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராத பாக்கி இல்லை.
கறுப்புப் பட்டியலிலும் என் பெயரில்லாத போது, அச்சிறப்புத் திட்டத்தில் பங்கேற்பதிலிருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் விளங்கவில்லை என்றார் அவர்.
திட்டங்கள் அவசர கதியாக உருவாக்கப்பட்டால் இப்படித்தான் ஆகுமெனக் கூறிக்கொண்ட மார்ஷல், MyJPJ செயலியில் தனது சுயவிவரங்கள் உடனடியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இல்லையென்றால் உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டி வரும் என எச்சரித்தார்.
அடையாள அட்டை வைத்திருக்கும் என்னை குடிமகன் அல்ல எனக் கூறுவது பொறுப்பற்றச் செயல் மட்டுமல்ல, என்னை இழிவுப்படுத்தும் செயல் கூட என்றார் அவர்.