
பூச்சோங், ஏப்ரல்-2- நேற்று சிலாங்கூர், பூச்சோங்கையே உலுக்கிய புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பு சம்பவத்தில், மனித நேயத்தின் உணர்ச்சிமிக்க ஒரு காட்சி எல்லாரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
நோன்புப் பெருநாளின் இரண்டாவது நாள் காலை 8 மணியளவில் பயங்கர வெடிப்புடன் வானில் தீப்பிழம்புகள் எழும்பிய போது, பெருநாள் விடுமுறையில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
சத்தம் கேட்டு விழித்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய போது, தற்காலிக நிவாரணமாக அவர்களை அதிகாரிகள் முதலில் தங்க வைத்தது புத்ரா ஹைய்ட்ஸ் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயமாகும்.
தீ காயங்களுடன் ஓடி வந்தவர்களை ஆலயத்தில் வைத்து அம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் முதலுதவிகளை வழங்கினர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
ஆலயத்தில் தங்கியிருந்த ஒரு முஸ்லீம் நண்பர், அவருடைய மதத் தொழுகை நேரத்தின் போது அங்கேயே ‘செஜாடா’ துணியை விரித்து தொழுகை மேற்கொண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
அதன் புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகி, மனிதநேயம், சகோதரத்துவம் ஆகியவற்றை எடுத்தியம்பும் உன்னத சாட்சியானது.
குறிப்பாக ஒரு மலாய்க்கார அன்பரே அக்காட்சி குறித்து நெகிழ்வாகப் பதிவிட்டிருந்தார்.
அவசர காலத்தின் போது அவ்வாறு செய்ய இஸ்லாத்தில் அனுமதிக்கப்படும் நிலையில், “இது இந்தியாவோ பாகிஸ்தானோ அல்ல, மாறாக இதுதான் உண்மையான மலேசியா. சட்டத்தை மதித்து நடப்பதோடு, தீவிரவாதப் போக்கைக் கைவிட்டாலே இந்நாடு அழகாகிப் போகும்” என்ற அவரின் பதிவு பெரும் அர்த்தம் பொதிந்ததாகும்.
வைரலான அப்பதிவைப் பார்த்த வலைத்தவாசிகள்,”மதம் என பிரிந்தது போதும், மனிதம் ஒன்றே தீர்வாகும்” பாடல் வரியை மேற்கோள்காட்டி, மதங்களால் நாம் பிரிந்தாலும், உண்மையான தீர்வு மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது மனிதநேயம் தான் என்பதை இந்த புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து ஒரு வகையில் உணர்த்தியிருப்பதாகக் கூறினர்.
அதுவும் நாட்டில் அடுத்தடுத்து இன-மதங்களை உட்படுத்திய சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நேரத்தில், இப்படியொரு நெகிழ வைக்கும் மனிதநேய சம்பவம் காளியம்மன் ஆலயத்தில், நோன்புப் பெருநாள் வேளையில் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வேளையில், அந்த இக்கட்டான நேரத்தில் இன-மத பின்புலம் எதுவும் கருதாமல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகளையும் உணவுகளையும் தங்களால் இயன்ற அளவு வழங்கியதாக ஆலய குருக்கள் மீனாட்சி சுந்தரம் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
சம்பவ இடத்தில் சேதங்களைப் பார்வையிட வந்திருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் காளியம்மன் ஆலயத்திற்கு நன்றிக் கூற மறக்கவில்லை.
காளியம்மன் ஆலயமும் அருகிலுள்ள மசூதியும் தற்காலிக நிவாரண மையங்களாகச் செயல்பட்டதை சுட்டிக் காட்டிய டத்தோ ஸ்ரீ அன்வார், நமக்குப் ஒரு பிரச்னை என வரும் போது ஒருவருக்கொருவர் உதவிக் கரம் நீட்டுவது தான் நமது பண்பு என்றார்.
அனைவருடனும் பரஸ்பரம் காட்டுவோம் எனக் கூறிச் சென்றார்.
ஒரு துயரமான நேரத்தில், நாம் அனைவரும் மலேசியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர அனைவரும் பிராத்திப்போம்