
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – ஆதரவின்றி தெருவில் சுற்றித் திரியும் பிராணிகள் குறிப்பாக நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதாகக் கூறி, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பேரணியில் 38 அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் பங்கேற்றனர்.
மலேசியாவில் விலங்குகள் நலனில் அக்கறை கொண்ட அரசு சாரா அமைப்புகள் மற்றும் குடிமக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதி எஸ்.ஷஷி குமார் அதற்கு தலைமையேற்றார்.
அவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Chong Zhemin பெற்றுக் கொண்டார்.
இந்நாட்டில் தெரு விலங்குகளின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை; அதே நேரம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் ஊராட்சி மற்றும் நகராண்மைக் கழகங்களாலும் தெரு விலங்குகள் கொல்லப்பப்படுகின்றன.
விலங்குகளைக் காப்பாற்றுவதில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை, விலங்கு நல ஆர்வலர்களும் விலங்குகள் காப்பகத்தைச் சேர்ந்தவர்களும் செய்கின்றனர்.
அப்படி காப்பாற்றப்படும் பிராணிகளை வெளியில் எடுக்க 250 ரிங்கிட் கட்டணம் வேறு விதிக்கின்றனர்; இது சரியல்ல என்றார் அவர்.
தெருவிலங்குகளை சரியாகக் கையாள்வதில், விவசாய அமைச்சின் கீழ் செயல்படும் DVS எனப்படும் கால்நடை சேவைத் துறை தவறிவிட்டது; அத்துறை இனியும் தேவையில்லை.
அதற்கு பதிலாக சுயேட்சையாக செயல்படும் அமைப்பொன்றை நிறுவி அதனை பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்றும் ஷஷி குமார் பரிந்துரைத்தார்.
பல வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இருந்தும், ‘குற்றவாளிகள்’ சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பி விடுகிறார்கள்.
இந்நிலையில், 2015 விலங்குகள் நலச் சட்ட அமுலாக்கத்தைக் கடுமையாக்க ஏதுவாக, அதில் திருத்தம் செய்யும் பரிந்துரைகளையும் இன்றைய மகஜரில் இணைத்துள்ளோம்.
இதனை நாடாளுமன்றம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை பின் வாங்கப் போவதில்லை என ஷஷி குமார் சூளுரைத்தார்.