
செப்பாங், ஏப் 14- ஐரோப்பாவுக்கு கடத்த முயன்ற 20.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 210 கிலோ கஞ்சா பூக்களை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.
கே.எல்.ஐ.ஏ தீர்வையற்ற வர்த்தக மண்டல பகுதியில் சரக்கு நிலையத்திலுள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அந்த கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டாக மத்திய சுங்கத்துறையின் இடைக்கால துணை தலைமை இயக்குனர் டாக்டர் அகமட் தவ்பிக் சுலைமான் ( Ahmad Taufik Sulaiman ) தெரிவித்தார்.
மலேசியாவை பரிமாற்ற மையமாக பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு அனுப்பப்படவிருந்த அந்த போதைப்பொருள் தென்கிழக்காசியா நாட்டிலிருந்து இங்கு கடத்திவரப்பட்டதாக தொடக்கக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருப்பதற்காக அந்த கஞ்சா பூக்கள் நொறுக்கு தீனிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கான தீனியின் பொட்டலங்களுக்கு உள்ளே வைக்கப்பட்டிருந்தது.
வழக்கமான கஞ்சா ஒரு கிலோவுக்கு 3,200 ரிங்கிட்டாக இருந்தாலும் கஞ்சா பூக்களின் விலை ஒரு கிலோ 98,000 ரிங்கிட்டாகும் என அகமட் தவ்பிக் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட இந்த கஞ்சா பூக்கள் தொடர்பில் இன்னும் விசாரணை செய்யப்பட்டு வருவதோடு இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. 1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39 B (1) விதியின் கீழ் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது