
செப்பாங், பிப் 26 – நோன்பு பெருநாள் காலத்தில் தீபகற்ப மலேசியாவில் இருந்து சரவாக், சபா மற்றும் லாபுவான் செல்லும் விமானங்களுக்கு குறைந்த கட்டண நிறுவனமான ஏர் ஏசியா 400 ரிங்கிட்டிற்கும் குறைவான ஒரு வழிக் கட்டணத்தை வழங்க முன்வந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று அறிவித்திருக்கிறார்.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 ஆம்தேதிவரை 90க்கும் மேற்பட்ட இரவு நேர விமானங்களில் 16,000 இருக்கைகளுக்கு ஏர் ஆசியா குறைந்த கட்டணத்தை வழங்கும்.
அனைத்து மலேசியர்களுக்கும் விமானப் பயணத்தை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் பணியில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.
அதிக டிக்கெட் விலைகள் குறித்த புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் வழங்கிய விமான கட்டண மானியங்களை அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
ஏர் ஆசியா போன்ற முக்கிய தொழில் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம், நாங்கள் தொடர்பை மேம்படுத்துகிறோம், பயணச் செலவுகளைக் குறைக்கிறோம், இறுதியில் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறோம் என ஏர்ஏசியாவின் இந்த ஆண்டிற்கான இரண்டாவது நிலையான கட்டண விமான முயற்சியை தொடக்கிவைத்த பிறகு அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் ஏர் ஆசியாவின் தலைமை செயல் அதிகாரி Fareh Mazputraவும் கலந்து கொண்டார்.
கோலாலம்பூர் மற்றும் கூச்சிங், சிபு, பிந்துலு அல்லது மிரி, அதே போல் ஜோகூர் பாரு மற்றும் கூச்சிங், மற்றும் சிபு இடையே ஒரு வழிக்கான விமான கட்டணம் 328 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மற்றும் கோத்தா கினபாலு, சண்டகன் அல்லது தவாவ், அதே போல் ஜோகூர் பாரு மற்றும் கோத்தா கினபாலுவுக்கிடையிலான விமான டிக்கெட்டும் 388 ரிங்கிட்டில் கிடைக்கும்.