
கோலாலம்பூர், செப்டம்பர்-4- நேரலை, வீடியோ, கருத்துகள் உள்ளிட்ட தமிழ் உள்ளடக்கங்கள் டிக் டோக் விதிமுறைகள் மற்றும் Community Guidelines-க்கு ஏற்ப உள்ளதா என கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள Moderators-களை அதிகரிக்கும் விஷயத்தில், டிக் டோக் நிர்வாகம் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறது.
இது தமக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியுள்ளார்.கடந்தாண்டு சமூக ஊடகப் பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரி அப்பாவு டிக் டோக்கில் பகடிவதைக்கு ஆளாகி உயிரிழந்தது முதல் டிக் டோக்கிடம் அக்கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
பலமுறை கேட்டுப் பார்த்து விட்டோம்; ஆனால் இதுவரை டிக் டோக்கிடமிருந்து பதிலே இல்லை என்றார் அவர். இந்நிலையில் அந்த வீடியோ பகிர்வுத் தளத்தில் இந்தியச் சமூகத்தை உட்படுத்திய பகடிவதை புகார்களைத் தாம் தொடர்ந்து பெற்று வருவதாகவும் ஃபாஹ்மி ஏமாற்றம் தெரிவித்தார்.
இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டினால் டிக் டோக் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பதை, MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்திடமே விட்டு விடுவதாக அவர் சொன்னார்.புக்கிட் அமானில் நடத்திய சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் ஃபாஹ்மி அவ்வாறு சொன்னார்.