
ஜோர்ஜ் டவுன், பிப் 7- 2025 ஆம் ஆண்டின் பினாங்கு தைப்பூசம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பக்தர்களுக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாண்டு தைப்பூசத்தின் இறுதிக்கட்ட பணியாக பினாங்கு தைப்பூசத்தின் உண்டியல் பணம் எண்ணப்படும் நடவடிக்கை மார்ச் 7 ஆம் தேதி கொம்தார் (KOMTAR) கட்டிடத்தின் 5ஆவது மாடியில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தலைமையில் நடைபெறும் .
நிர்வாக காரணங்களினால் உண்டியல் எண்ணும் பணி மூன்று வாரங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாற்று இடங்கள், பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் பணத்தை வங்கியில் செலுத்தும் வசதியில்லாத காரணங்களும் இதில் அடங்கும்.
உண்டியல் எண்ணும் பணி வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த , உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்காக கூகுல் பாரம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
முதலில் பதிவு செய்பவர்கள் மற்றும் அவர்களின் தகுதி அடிப்படையில் 60 பேர் இதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். உண்டியல் எண்ணும் பணி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அதிகாரப்பூர்வ முகநுல் பக்கத்தில் நேரலை செய்யப்படும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத்தலைவர் செனட்டர் டாக்டர் R. லிங்கேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.