ஜோகூர் பாரு, டிசம்பர்-23 – ஜோகூர் பாருவில், பங்கு முதலீட்டு மோசடியில் மெக்கானிக்கும் உணவுக் கடை வியாபாரியுமான பெண்ணும் தலா 1 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்துள்ளனர்.
முதல் சம்பவத்தில், 400 விழுக்காடு வரை இலாபம் கிடைக்குமென நம்பி, இணையம் வாயிலான பங்கு முதலீட்டு மோசடியில் 172,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார் மெக்கானிக்.
குறுகிய காலத்திலேயே அவ்வளவு இலாபம் கொட்டுமென்ற விளம்பரத்தால் 44 வயது அவ்வாடவர் ஏமாந்திருப்பதாக, தென் ஜோகூர் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
பங்கு முதலீட்டு ஆலோசகர் எனக் கூறிக் கொண்டு நவம்பர் 2-ம் தேதி WhatsApp வாயிலாக பெண்ணொருவர் அவரை தொடர்புகொண்டுள்ளார்.
கொடுக்கப்பட்ட link இணைப்பைத் தட்டி, சுய விவரங்களையும், வங்கிக் கணக்கு விவரங்களையும் அவர் நிரப்பியுள்ளார்.
இதையடுத்து நவம்பர் 5 முதல் டிசம்பர் 13 வரையிலான காலக்கட்டத்தில் 13 தடவையாக 7 வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 172,000 ரிங்கிட்டை அவர் முதலீட்டாக போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இலாபத் தொகையை மீட்க முயன்று தோல்வி கண்டவர், கூடுதலாக 620,000 ரிங்கிட்டை செலுத்துமாறு வற்புறுத்தப்பட்ட போதே, தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்தார்.
மற்றொரு சம்பவத்தில், உணவுக் கடை வியாபாரியான 48 வயது பெண்ணும், 100,000 ரிங்கிட்டுக்கும் மேல் மோசம் போனார்.
இரட்டிப்பு இலாபம் பார்க்கலாமென facebook-கில் பார்த்த விளம்பரத்தை நம்பி, நவம்பர் கடைசி முதல் டிசம்பர் 16 வரை 8 தடவையாக 4 வங்கிக் கணக்குகளில் 100,000 ரிங்கிட்டை அவர் மாற்றியுள்ளார்.
போதாக்குறைக்கு, தனது வங்கிக் கணக்கு விவரங்களையும் கடவுச் சொல்லையும் சந்தேக நபரிடம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் போட்ட பிறகு சந்தேக நபரை தொடர்பு கொள்ள முடியாதபடி, தொலைப்பேசி அழைப்புத் துண்டிக்கப்பட்ட போதே தாம் ஏமாந்து போனதை அம்மாது உணர்ந்து போலீசில் புகார் செய்தார்.
இரு சம்பவங்களும் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றன.