
கோலாலம்பூர், அக் 28 – மலேசிய தொழிலாளர்களின் சமூக உளவியல் மற்றும் ஆரோக்கியம் மிகவும் மோசம் அடைந்துவரும் இவ்வேளையில் மலேசிய தொழிலாளர்களிடையே உளவியல் சிக்கல்களும் மோசமாகி வருகின்றன. NHMS எனப்படும் 2023 ஆம் ஆண்டின் தேசிய உடல்நலம் மற்றும் நோய் மீதான ஆய்வின் மூலம் , மலேசியாவில் வயது வந்தோரில் 4.6 விழுக்காட்டினர் மனச்சோர்வின் அறிகுறிகளை அனுபவித்து வருவதாக மனித வள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப் தெரிவித்தார்.
உலகளவில் 15 விழுக்காடு தொழிலாளர்கள் மன அழுத்தத்தை அனுபவிப்பதால் உற்பத்தி திறன் பாதிக்கிறது. இதனால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 12 பில்லியன் வேலை நாட்களை இழந்தது மற்றும் 50 விழுக்காடு மறைமுகமாக செலவுகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழில் பாதுகாப்பு , தொழில் ஆரோக்கிய பாதுகாப்பிற்கான துறை மூலம் மனித வள அமைச்சின் தேசிய நிலையிலான 2024 மடானி கண்காட்சியை இன்று ஷா அலாம் செத்தியா அலாமில் தொடக்கிவைத்தபோது அஸ்மான் இத்தகவலை வெயியிட்டார்.
பணியிடத்தில் உள்ள உளவியல் சிக்கல்களின் அதிகரிப்புக்கு அனைத்து தரப்பினரிமிருந்தும் உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. உற்பத்தித்திறன் மற்றும் மன உறுதியை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.