
கோம்பாக், டிசம்பர் 19-பத்து கேவ்ஸ் இந்தியர் செட்டில்மண்ட் குடியிருப்புப் பகுதியில், 2.5 கிலோ மீட்டர் நீள சாலை வளர்ச்சி திட்டத்திற்கு வழிவிட்டு வீடுகளை காலி செய்ய, 44 குடும்பங்கள் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளன.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதனைத் தெரிவித்தார்.
இவ்வாரம், குடியிருப்பாளர்கள், கோம்பாக் நில அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆகியத் தரப்புகளுக்கு இடையிலான சந்திப்பில் அதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதுவோர் இன விவகாரமாக முத்திரைக் குத்தப்படாமல் இருக்க, அந்த நேரடி விளக்கக் கூட்டம் அவசியமானதாக அமிருடின் சொன்னார்.
இந்த சாலை திட்டம், அப்பகுதியின் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், வீடுகளை காலி செய்ய போதுமான கால அவகாசம் வழங்கவும், தைப்பூச தயார்நிலையை மதிக்கும் வகையிலும், தாம் ஏற்கனவே கூறியபடி தைப்பூசத்திற்குப் பிறகே அங்கு பணிகள் தொடங்கும் என்றார் அவர்.
வீட்டை காலி செய்தவர்களுக்கு தற்காலிகமாக அவர்களின் வாடகைச் செலவுக்கு உதவவும் சிலாங்கூர் அரசு முன்வந்துள்ளது.
குடியிருப்பாளர்களின் நலனை முன்னிறுத்தும் முறையான இந்த நீண்டகால வளர்ச்சிக்கு, மாநில அரசு RM10 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
அவ்வகையில், குடியிருப்பாளர்களுக்கு மேலும் வசதியான, அவர்களின் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகளைக் கட்டித் தர, SPNB எனப்படும் தேசிய வீடமைப்பு நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.



