
மஞ்சோங், பிப்ரவரி-22 – பேராக், மஞ்சோங், பந்தாய் ரெமிஸ் கடற்கரையில் இந்தோனீசியக் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக புகாரேதும் வரவில்லை.
புதன்கிழமை முதல் ஊடகங்களில் அப்படியொரு தகவல் பரவினாலும், பொது மக்கள் எவரும் இதுவரை புகாரளிக்கவில்லை என பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் கூறினார்.
அங்கு இந்தோனீசியக் கடற்கொள்ளையைர்களின் அட்டகாசம் அண்மையக் காலமாகவே அதிகரித்திருப்பதாக பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் Wong May Ing முன்னதாகக் கூறியிருந்தார்.
இதனால் உள்ளூர் மீனவர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சொன்னார்.
என்றாலும் அந்த கரையோரத்தில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருந்ததாக புகாரில்லை என, மலேசிய கடல் அமுலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
உண்மையில் நடந்தது என்னவென்றால், மலாக்கா நீரிணையில் அண்டை நாட்டைச் சேர்ந்த பொறுப்பற்ற சில தரப்பினர், உள்ளூர் மீனவர்களின் படகுகளை மிரட்டியுள்ளனர்.
மற்றபடி மலாக்கா நீரிணையின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அத்துறை உத்தரவாதம் அளித்திருந்தது.
இதனிடையே, கடந்தாண்டு அங்கு மீனவப் படகிலிருந்த வெளிநாட்டவரை ஆயுதமேந்தியக் கடற்கொள்ளையர்கள் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், விசாரணைத் தொடருகிறது.
சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என, டத்தோ நோர் ஹிஷாம் கூறினார்.
2024 ஜனவரி 23-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் தாய்லாந்து நாட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.