
கோலாலம்பூர், மார்ச்-29- கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் நேற்றிரவு ஒரு பலூன் வியாபாரியுடன் DBKL அமுலாக்க அதிகாரிகள் கைகலந்த சம்பவத்தை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர்களில் ஒருவர் சாடியுள்ளார்.
நிதியமைச்சர் என்ற முறையில் அன்வாரின் அரசியல் செயலாளராக இருக்கும் கமில் முனிம் (Kamil Munim) அச்சம்பவத்தை கண்டித்ததோடு, அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அந்த சாலையோர வியாபாரியை அப்படி நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் இழிவான செயலாகும்.
“அதனை DBKL என்னதான் நியாயப்படுத்த முயன்றாலும், இதுபோன்ற கொடூரமான மற்றும் முரட்டுத்தனமான செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது,” என கமில் தனது X தளப் பதிவில் கூறினார்.
புனித இரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் நல்ல செயல்களைச் செய்வதும் நம்மை மனிதாபிமானப்படுத்த வேண்டும்; அதை விடுத்து ஏழைகளிடம் இரக்கத்தையும் கருணையையும் நாம் வெளிப்படுத்தாவிட்டால் நோன்பிருந்து என்ன பயன்? என கமில் கேள்வியெழுப்பினார்.
முன்னதாக DBKL அமுலாக்க அதிகாரிகளுக்கும் வியாபார உரிமம் பெறாத சாலையோர வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி, ஒரு பலூன் விற்பனையாளருடன் அமுலாக்க அதிகாரிகள் கைகலப்பில் ஈடுபடுவதும், இறுதியில் அவ்வியாபாரி தரையில் சாய்க்கப்படுவதும் வைரலான வீடியோவில் தெரிந்தன.
அந்த பலூன் வியாபாரியை தாக்க வேண்டாமென, சுற்றியிருந்த பலர் அமுலாக்க அதிகாரிகளிடம் கூச்சலிடுவதையும் கேட்க முடிந்தது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், போயும் போயும் ஒரு பலூன் வியாபாரியிடமா உங்கள் பலத்தை காட்டுவீர்கள் என DBKL அமுலாக்க அதிகாரிகளை சாடினர்