
கோலாலம்பூர், பிப் 25 -இந்தியர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரேத்தியகமாக உதவிகளை வழங்குவதில் தாங்கள் ஒரு போதும் மலாய்க்காரர்களை தூண்டி விடும் வகையில் அரசியல் ஆக்கியதில்லை என்றும் வரும் காலங்களிலும் அவ்வாறு செய்யப்போவதில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறியுள்ளார்.
மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடோ உதவித் திட்டங்களை அறிவிப்பதிலோ எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவ்வாறு அறிவித்தால் நாங்கள் அரசியல் ஆக்குவோம் அல்லது மலாய்க்காரர்கள் கோபித்துக் கொள்வார்கள் என பிரதமர் குற்றம் சாட்டக்கூடாது என பெரிக்காத்தான் நேஷனல் துணைத்தலைவருமான ஹம்சா தெரிவித்தார். உண்மையிலேயே பிரதமர் இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என எண்ணினால் அவர் அதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்.
இன்று நடந்த இந்திய ஊடகங்களுடனான சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
இந்தியர்களின் பொருளாதார நிலையையும் அவர்களின் சிக்கல்களையும் நாங்களும் அறிந்துள்ளோம். சீனர்களின் Kampung Baru போன்று இந்தியர்களுக்கும் புதிய கம்பங்களை உருவாக்க வேண்டும் என நான் முன்பே அப்போதைய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்-பிடம் பரிந்துரைத்திருந்தேன் என ஹம்சா சுட்டிக் காட்டினார்.
அடுத்த பொதுத்தேர்தலுக்குள் மலாய்க்காரர்களின் ஆதரவு 70 முதல் 75 விழுக்காட்டை அடையும் என எதிர்ப்பார்க்கும் அதேவேளையில் இந்தியர்களின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனலுக்கு 70-விழுக்காடு திரும்பினால் அடுத்து தாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி என்றார் பெர்சத்து கட்சியின் துணைத்தலைவருமான ஹம்சா.