
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – Honda, Kia, MAN TGS, Ford, Audi, Mercedes ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களை உட்படுத்திய 41,688 வாகனங்களை, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ திரும்ப அழைத்துள்ளது.
2022 முதல் 2024 வரை வெளியிடப்பட்ட Honda Civic மற்றும் CRV இரக வாகனங்களே அதிகமாக அதாவது 36,678 வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
அடுத்து Kia Sorento XM இரகத்திலான 4,245 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட வாகனங்களின் கட்டமைப்பு, கருவிகள் அல்லது அமைப்புகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க, அவற்றைத் திரும்பப் பெறுவது அவசியமாவதாக JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli கூறினார்.
ஒவ்வொரு வாகன உரிமையாளரையும் அந்தந்த வாகன நிறுவனங்கள் தொடர்பு கொண்டு, அவர்களின் வாகன பரிசோதனை இடங்களை ஒருங்கிணைப்பது பற்றி தெரிவிக்கும்.
எனவே, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் அதற்குத் தயாராக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட வாகனப் பாகங்கள், அந்தந்த வாகன உற்பத்தி நிறுவனத்தின் செலவிலேயே மாற்றப்படும்.
இந்த திரும்பப் பெறும் உத்தரவு தொடர்பான கூடுதல் தகவலுக்கு, வாகன உரிமையாளர்கள் அருகிலுள்ள அந்தந்த விற்பனை அல்லது சேவை மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அங்கு நேரில் செல்லலாம்.
பாதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவை பாதுகாப்பாப்பாக இருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாட்டில் JPJ உறுதியாக உள்ளதாக Datuk Aedy கூறினார்.