
பாயான் லெப்பாஸ், நவம்பர் 5 – பினாங்கு சுங்கை ஆரா பகுதியிலுள்ள ஜாலான் கெனாரியில் (Jalan Kenari), 5 மீட்டர் அகலமுள்ள நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அச்சாலை நவம்பர் 5 அதாவது இன்று வரை மூடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜாலான் கெனாரி மற்றும் ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹாஷிம் (Jalan Dato Ismail Hashim) சந்திப்பு சாலையில் நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்தவுடனேயே பினாங்கு JKR குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதுகாப்பு மற்றும் பழுதுப்பார்க்கும் பணிகளைத் தொடங்கியது என்று பினாங்கு மாநில வசதி, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் துறை நிர்வாகி சைரில் கீர் ஜொஹாரி (Zairil Khir Johari) கூறினார்.
இந்நிலையில் பொதுமக்கள், மீட்பு பணியாளர்களின் வழிக்காட்டுதலைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாயான் லெப்பாஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்ருல் மகாதீர் அசீஸ் (Datuk Azrul Mahathir Aziz), நிலச்சரிவு சுமார் 5 மீட்டர் அகலத்தில் உருவாகியுள்ளது என்றும் தற்போது பழுதுப்பார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.



