பாலேக் பூலாவ், செப்டம்பர் -24 – பினாங்கு, பாலேக் பூலாவ், தெலுக் கும்பாரில், கார் பட்டறையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்களைத் தாக்கியதன் பேரில், கணவன்-மனைவி உள்ளிட்ட ஐவர் கைதாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் கார் பட்டறையில் வைத்து நேற்று அத்தாக்குதல் நடந்துள்ளது.
கார் பட்டறை உரிமையாளரும், 2 பணியாளர்களும் கடையிலிருக்கும் போது 6 ஆடவர்கள் அவர்களைத் தேடி வந்துள்ளனர்.
இரு பணியாளர்களில் ஒருவர் அடிக்கடி வீடு தேடி வந்து மோட்டார் சைக்கிள் பழுதுப்பார்க்கப்பட்டு விட்டதாகக் கூறியதால் சினமடைந்த சந்தேக நபர், அப்பணியாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, fork lock மற்றும் இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளார்.
சண்டையை விலக்கி விட வந்த பட்டறை உரிமையாளருக்கும் அடி விழுந்திருக்கிறது.
தாக்கியதோடு விடாமல், அடி வாங்கியப் பணியாளரின் தங்கச் சங்கிலி, உரிமையாளரின் வெள்ளிக் காப்பு ஆகியவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக போலீஸ் கூறியது.
இந்நிலையில் கைதான ஐவரும் விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.