
கோலாலாம்பூர், செப்டம்பர்-22 – ம.இ.காவும் பாஸ் கட்சியும் இணைந்து ஒத்துழைப்பு நல்கினால் அது இந்தியச் சமூகத்திற்கே அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது மற்றும் மலிவான பிரச்சாரம் என, ம.இ.கா தேசிய வியூக அதிகாரி டத்தோ தீனாளன் டி. ராஜகோபாலு (Datuk Thinalan T. Rajagopalu) சாடியுள்ளார்.
DAP தான் முன்பு பாஸ் கட்சியுடன் ஒட்டி உறவாடியது என்பதை வரலாறு சொல்லும்;
அதிலும் குறிப்பாக 2008 பொதுத் தேர்தலில் பேராக்கில் பெரும்பான்மையான இடங்களை வென்றபோதும், பாஸ் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ முஹமட் நிசார் ஜமாலுடினை (Datuk Seri Mohammad Nizar Jamaluddin) மந்திரி பெசாராக அது தேர்ந்தெடுத்தது.
ஒரு கட்டத்தில் பாஸ் வேண்டாமல் போகவே, பின்னர் அதே கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தவர்களால் உருவாக்கப்பட்ட அமானா கட்சியை DAP எளிதாக ஏற்றுக்கொண்டது.
இதுவே DAP-யின் அரசியல் இரட்டை முகம் என தீனாளன் சுட்டிக் காட்டினார்.
அரசியல் ஒத்துழைப்பு என்பது சாதாரணமான ஒன்றே; அவ்வகையில் ம.இ.கா அதன் பாதையைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டுள்ளது.
இதில் குட்டையைக் குழப்ப நினைப்பவர்கள் கதைகளை ஜோடிக்க வேண்டாம் என தீனாளன் நினைவுறுத்தினார்.
முந்தைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலேயே பாஸுடன் இணைந்து ம.இ.கா பணியாற்றியுள்ளது ; அப்போது இந்தியச் சமூகத்திற்கு அக்கட்சியால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையே என்றார் அவர்.
“தங்களுக்கு வேண்டிய போது பாஸ் கட்சியுடன் ஒரே கட்டிலில் தூங்கியவர்கள்/ ஒட்டி உறவாடியவர்கள் இப்போது தங்களை சுத்தமானவர்கள் போல காட்டிக் கொண்டு நடிக்க வேண்டாம்” என்று தீனாளன் காட்டமாகக் கூறினார்.
ம.இ.கா.வை கருப்பு ஆடாக காட்ட முயல்வதை விடுத்து, போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்றார் அவர்.