Latestமலேசியா

பிசுபிசுத்த ‘Turun Anwar’ பேரணி; இந்தியர்கள் இன்னமும் அன்வார் பக்கமே என்கிறார் குணராஜ்

கோலாலம்பூர், ஜூலை-27 – இந்நாட்டு இந்தியச் சமூகம் இன்னமும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பக்கமே நிற்கிறது; மடானி அரசாங்கம் பயணிக்கும் திசையில் இந்தியர்கள் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

நேற்றைய ‘Turun Anwar’ பேரணியில் இந்தியர்களின் பங்கேற்பு பிசுபிசுத்து காணப்பட்டதே அதற்கு சாட்சி என, சிலாங்கூர் செந்தோசோ சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

ஒன்றுக்கும் உதவாத சாலை ஆர்ப்பாட்டத்தை விட, அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள், பொருளாதார நிலைத்தன்மை, அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கக் கொள்கைகள் போன்றவற்றில் தான் இந்தியச் சமூகம் நாட்டம் கொண்டுள்ளது.

அன்வார் தலைமையின் கீழ், நிறுவன சீர்திருத்தங்கள், ஊழல் ஒழிப்பு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற ஏராளமான முன்னேற்றங்கள் கண்கூடு.

என்றாலும், இந்தியச் சமூகத்தின் மீது மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதையும் ஒப்புக் கொள்கிறோம்; குறிப்பாக கல்வி-வேலை வாய்ப்பு, இளைஞர் நலன், சமூகப் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றில் சிறப்பு அக்கறைத் தேவை.

சமூகத்தின் இக்கவலைகளைப் பிரதமரும் நன்கறிவார்.

எனவே மக்களுக்கான வாக்குறுதிகளை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக, பி.கே.ஆர். கட்சியின் மத்தியத் தலைமைத்துல மன்ற உறுப்பினருமான குணராஜ் சொன்னார்.

அன்வாரை பதவி விலகக் கோரி எதிர்கட்சியினர் நேற்று கோலாலம்பூரில் இந்த ‘Turun Anwar’ பேரணியை நடத்தினர்.

எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்ற அதில் சுமார் 18,000 பேர் பங்கேற்றதாக கோலாலம்பூர் போலீஸ் கூறியது.

அதே சமயம் 200,000 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதாக பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுக் கூறிக் கொண்டது.

இரு முன்னாள் பிரதமர்களான தான் ஸ்ரீ முஹிடின் யாசின், துன் Dr மகாதீர் மொஹமட் தலைமையில் எதிர்கட்சிகள், அரசு சாரா அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் ஆகியோர் அப்பேரணியில் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!