
ஜோர்ஜ்டவுன், ஜூலை-22- பினாங்கு, செபராங் பிறையில், வெளிமாநிலத்தவர் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்படுவது ஏன் என, உரிமைக் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் (David Marshall) கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூர் வணிகர்களின் புகார்களைத் தொடர்ந்தே அத்தடை விதிக்கப்பட்டதாக செபராங் பிறை நகராண்மைக் கழகமான MBSP நியாயம் கற்பிக்கிறது.
உண்மையில், இது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்றென, மார்ஷல் சுட்டிக் காட்டினார்.
இப்படி ஒரு தடை செபராங் பிறையில் மட்டும் தான் உள்ளதா? அல்லது பினாங்கின் மற்ற பகுதிகளிலும் உண்டா என்பது தெரியவில்லை.
இதே MBSP நகாரண்மைக் கழக உறுப்பினராக தாம் பணியாற்றிய 10 ஆண்டுகளில் இப்படியொரு ‘கொடுமையான’ விதிமுறை இருந்ததில்லை என்றார் அவர்.
மின்னியல் வணிகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என மாறிவிட்ட இந்த நவீன காலத்திலும், “உள்ளூர் வணிகர்களைப் பாதுகாக்கிறோம்” என்ற அற்பக் காரணங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல; இது அடிப்படையற்றதும் கூட.
இதுவே மளிகைக் கடைக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், உடனே பேரங்காடிகளை MBSP-யால் மூடி விட முடியுமா? அல்லது சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக ரஹ்மா விற்பனையை முடக்கத்தான் முடியுமா? என மார்ஷல் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
இந்திய வர்த்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதால், பயனீட்டாளர்கள் என்ற வகையில் மக்களுக்கே நன்மைக் கிடைக்கிறது; நியாயமான நிலையில் பல்வேறு பொருட்களை அவர்களால் வாங்க முடிகிறது.
இந்நிலையில், வெளிமாநிலத்தவருக்குத் தடை விதிக்கும் செயல், அரசியலமைப்புச் சட்டத்தை விட ஊராட்சி மன்றம் பெரியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
எனவே, இவ்விவகாரத்தை பினாங்கு ஆளுநர் மற்றும் மாமன்னரிடம் நாங்கள் கொண்டுச் செல்வோம் என, இன்று வெளியிட்ட அறிக்கையில் டேவிட் மார்ஷல் குறிப்பிட்டார்.