
கோலாலம்பூர், ஏப்ரல்- 5 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கு இந்து அல்லாத ஒருவர் தலைமையேற்கலாமா என்பது தொடர்பில் ஒரு விவாதம் தற்போது கிளம்பியுள்ளது.
இப்பேச்சுக்கு அச்சாணி போட்டதே அண்மைய DAP மத்திய செயலவைத் தேர்தல் முடிவுகள்தான்; அறப்பணி வாரியத்தின் தலைவராக உள்ள RSN ராயர், அத்தேர்தலில் தோல்வியுற்றதால், அவர் மாற்றப்பட வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன; அல்லது திரைமறைவில் வேலைகள் நடக்கின்றன.
இந்த நிலையில்தான், மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வராக உள்ள ஜக்டீப் சிங் டியோவும், அப்பதவியைப் பிடிப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மாநில அரசின் துணை முதல்வர் அதிகாரத்தில் இருக்கும் இந்திய வம்சாவளி என்ற முறையில், அறப்பணி வாரியத்திற்கு ஜக்டீப் தலைமையேற்பதே சரியாக இருக்குமென ஒரு சாரார் பேசி வருகின்றனர்.
முன்பு Dr பி. ராமசாமி துணை முதல்வராக இருந்த போது, அவர்தான் வாரியத்திற்குத் தலைமையேற்றிருந்தார்.
ஆனால், ஓர் இந்து அமைப்புக்கு சீக்கிய மதத்தவர் தலைமையேற்பதா என்ற கலகக் குரல்களும் வெடிப்படையாகவே வெடித்துள்ளன.
மலேசிய இந்து சங்கத்தின் பினாங்குக் கிளை, மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பினாங்குக் கிளை கூட, ஓர் இந்துவே அறப்பணி வாரியத்திற்கு தலைவராக வரவேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
ஆனால், பினாங்கு இந்து அறப்பணி வாரியச் சட்டப்படி, தலைவருக்கு மதம் சம்பந்தப்பட்ட எந்தத் தகுதியும் கட்டாயம் அல்ல.
இந்து அல்லாதவர் தலைவர் பதவிக்கு வருவதைத் தடுக்க சட்டத்தில் இடமில்லை என, அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான எம். ராமசந்திரன் கூறுகிறார்.
இந்து என்ற சொல்லில் சீக்கியமும் வந்து விடுவதாக சட்டமே கூறுகிறது என அவர் விளக்கம் கொடுக்கிறார்.
ஆனால், இந்து ஆகம அணியின் அருண் துரைசாமியோ அக்கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்; சீக்கியம் இந்து மதத்திலிருந்து சட்ட ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் வேறுபட்ட மதம் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
ஆனால், நடப்பற்றை எல்லாம் பார்த்தால் இங்கு உண்மையில் இந்துவா சீக்கியரா என்பது விஷயமல்ல;
இது DAP அரசியல் கோஷ்டிகளுக்கு இடையில் நடக்கும் உட்பூசலைத்தான் வெளிச்சம் போட்டு காட்டுவதாக சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மாநில முதல் அமைச்சர் ச்சௌ கோன் யாவ் , நடப்பு வாரிய உறுப்பினர்களின் தவணை வரும் ஜூலை மாதம் முடியும் வரை, எந்த நியமனமும் மேற்கொள்ளப்படாது என அறிவித்து விட்டார்.
இருந்தாலும், இது தொடர்ந்து பேசுப் பொருளாகி வருவதே, அரசியல் அதிகாரப் போராட்டம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை யூகிக்க முடிகிறது.
நாற்காலிக்கு யார் அடித்துக் கொண்டாலும், தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் அதனை ஆக்கப்பூர்வமாக செய்ய முடியுமா என்பதே இங்கு முக்கியம்.
இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்வதோடு உரிமைகளை நிலைநாட்டும் ஆற்றலை தலைவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
பெயரிலேயே இந்து அறப்பணி என்பதை தலையாயக் கடமையாக வைத்துக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தினால் சரியாக இருக்காது.
இந்த சர்ச்சை இதோடு நிற்குமா? அல்லது ஜூலை வரை தொடர்ந்து பெரும் உட்பூசலே வெடிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
இந்த நியமனத்தில் மாநில அரசு எடுக்கப் போகும் முடிவையும் மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.