Latestமலேசியா

பினாங்கு தைப்பூசத்தில் ஒருங்கிணைந்த இரத ஊர்வலத்திற்கு மீண்டும் முட்டுக்கட்டை

ஜோர்ஜ் டவுன் , டிச 28 – ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் பினாங்கு தைப்பூச திருவிழாவில் வெள்ளி ரதமும், தங்க ரதமும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த இரத ஊர்வலமாக ஒன்றாக பயணிக்கும் எதிர்ப்பார்பு நிறைவேறும் வாய்ப்பில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆறு ஆண்டு காலமாக இந்த விவகாரத்தில் இருந்துவரும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சி மீண்டும் தோல்வியில் முடியும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. பினாங்கு இந்து அறநிலை வாரியத்திற்கும் , நகரத்தார் கோயில் அறங்காவலர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம், கருத்து வேறுபாடு காரணமாக முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரத்தார் 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்று தங்களது வெள்ளி ரதம் மட்டும் ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் தங்க ரதம் ஊர்வலத்தை நடத்தும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லையென்று கூறப்படுகிறது.

பினாங்கில் தைப்பூச ஊர்வலம் 1856 இல் தொடங்கியதிலிருந்து வெள்ளி ரதம் 120 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. 2017ஆம் ஆண்டில் அப்போது பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்த டாக்டர் P. ராமசாமியால் தங்க ரத ஊர்வலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் இந்து அறப்பணி வாரியத்திற்கும் நகரத்தார் தலைமையில் இருந்துவரும் கோயில் நிர்வாகத்திற்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தைப்பூச திருவிழா ரத ஊர்வலத்திற்கு வெள்ளி தேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் . பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அதனை நிராகரித்ததாக நகரத்தார் ஆலயத்தின் மூத்த அறங்காவலர் டாக்டர் ஏ. நாராயணன் கூறினார்.

பினாங்கு இந்த அறப்பணி வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.எஸ்.என். ராயர் எதிர்வரும் தைப்பூச திருவிழாவில் கூட்டு ரத ஊர்வலத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். தைப்பூசம் மீதான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை ராயர் நேற்று மறுத்தார். நாங்கள் ஒரு தீர்வை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஜனவரி மாத தொடக்கத்தில் இது தொடர்பாக மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!