பிரதமருக்கு 6 மாத சீர்திருத்தக் கோரிக்கைக்கான காலக்கெடு: ம.இகாவுக்கும் DAP-க்கும் இடையில் வெடித்தது அறிக்கைப் போர்

கோலாலம்பூர், டிசம்பர்-13, சபா சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததிலிருந்து, 6 மாதங்களில் பிரதமர் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென DAP காலக்கெடு விதித்திருப்பது தொடர்பில், அக்கட்சிக்கும் ம.இ.காவுக்கும் இடையே அறிக்கைப் போர் வெடித்துள்ளது.
தன்னுடைய பலவீனங்களை மறைக்க, சீர்திருத்தம் என்ற பெயரில் பிரதமருக்கே காலக்கெடு விதிப்பது வெறும் அரசியல் நாடகம் என ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ RT. ராஜசேகரன் முன்னதாக DAP-யை சீண்டியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த DAP-யின் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன், 60 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த போது இந்தியச் சமூகத்தை முன்னேற்றத் தவறிய ம.இ.கா எல்லாம் அதுபற்றி பேசக்கூடாது என காட்டமாகக் கூறினார்.
தவிர AIMST, MIED போன்ற கல்வி நிறுவனங்களை ம.இ.கா தவறாக நிர்வகிப்பதாவும், சீர்திருத்தங்களை விட அரசியல் அதிகாரத்தையே அது முதன்மைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.
“உங்களைப் போல நாங்கள் வெட்டியாக இல்லை; சீர்திருத்தம், கல்வி, பல்லின நல்லிணக்கம் என ஒற்றுமை அரசாங்கத்தில் நாங்கள் பல்வேறு மக்கள் பணி செய்கிறோம்” என பிரகாஸ் கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலடி தந்துள்ள ராஜசேகரன், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு தொடங்கி, AIMST பல்கலைக்கழகம் மற்றும் MIED நிறுவனத்தின் கல்வி உபகாரச் சம்பளம் வரை இந்தியச் சமூக வளர்ச்சியில் ம.இ.காவின் பங்களிப்பைப் பட்டியலிட்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை ம.இ.கா உயர்த்தியுள்ளது.
இந்த சாதனையெல்லாம், “ஒப்புக்கு அரசாங்கத்தில் இருந்துகொண்டு உருப்படியாக எதுவும் செய்யாத DAP-க்கு எங்கு தெரியும்?” என ராஜசேகரன் விளாசினார்.
வரிச் சுமை, லாரி ஓட்டுநர்களின் பிரச்னை என தீர்க்கப்படாமல் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன; அதை விட பிரகாஸ் முதலில் தன் தொகுதியில் உள்ள வெள்ளப் பிரச்னைக்கு பதில் சொல்லட்டும் என ராஜசேகரன் சவால் விடுத்தார்.
இப்படி, ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளாக இருந்துகொண்டு இவ்விரு கட்சிகளும் காரசாரமாக அறிக்கைப் போரில் ஈடுபட்டு வருவது, அரசியல் அரங்கில் அனலை இன்னும் கூட்டியுள்ளது.
சபா தேர்தல் முடிவு, மாநில அரசாங்கத்தை முடிவுச் செய்ததோடு நிற்காமல் தீபகற்ப மலேசிய அரசியல் களத்திலும் அறிக்கை போருக்கு வித்திட்டுள்ளது.



