
கோலாலம்பூர், ஜூலை 22 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட இரண்டு தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கங்களைப் பதிவேற்றிய சந்தேக நபரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) விசாரித்து வருன்கிறது.
நாட்டில் பிற கட்சிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குவது குறித்த பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு எதிர்ப்பாக இந்த உள்ளடக்கம் பதிவேற்றப்பட்டுள்ளது என்று MCMC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மற்றொரு பதிவில், பிரதமரின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் தொடர்பாகவும் தவறான மற்றும் ஆபாசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணைக்கு உதவுவதற்காக, MCMC நேற்று சைபர்ஜெயாவிலுள்ள தலைமையகத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அந்த ஆடவரை அழைத்துள்ளதைத் தொடர்ந்து அவரின் கைத்தொலைபேசி மற்றும் சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொது ஒழுங்கு மற்றும் தேசிய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க MCMC தொடர்ந்து உறுதியான நடவடிக்கை எடுப்பதில் திண்ணமாக உள்ளது என்று அறிவித்துள்ளது.
இந்த வழக்கு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.